எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
சோதனைகள் சூழ்ந்த கலையுலகில், அவைகளை சாதனைகளாக்கி, பின் வேதனைகளை மட்டுமே விலை கொடுத்து வாங்கிய விந்தை மிகு நகைச்சுவை நாயகன் நடிகர் சந்திரபாபுவின் 97வது பிறந்த தினம் இன்று…
* முத்து நகர் என போற்றப்படும் தூத்துக்குடியில் பிறந்த முத்தான திரைக்கலைஞன் ஜே.பி சந்திரபாபு, 1927ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜோசப் ரோட்ரிக்ஸ் மற்றும் ரோஸலின் இணையரின் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் பிச்சை பனிமயதாசன் பெர்னாண்டோ.
* கலை வாழ்விலும், காலம் தந்த இல்லற வாழ்விலும் ஏமாற்றம் ஒன்றையே இறுதியில் வெகுமதியாய் பெற்ற, யதார்த்த நாயகன்தான் நடிகர் சந்திரபாபு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத திரைக் கலைஞனாய் வாழ்ந்தவர் இவர்.
* போராட்டமான இவரது கலையுலகப் பயணத்தின் ஆரம்பமும், உயிரைப் பணயம் வைத்து போராடித்தான் பெற வேண்டியிருந்தது. விஷம் அருந்தி, தற்கொலைக்கு முயன்று அதன்பின் கிடைத்ததுதான் இவரது முதல் பட வாய்ப்பான “தன அமராவதி” என்ற திரைப்பட வாய்ப்பு.
* தொடர்ந்து “மோகன சுந்தரம்”, “ரத்தக்கண்ணீர்”, “குலேபகாவலி”, “மாமன் மகள்”, “மகாதேவி”, “புதையல்”, “புதுமைப்பித்தன்”, “பதிபக்தி” என அன்றைய முன்னணி நட்சத்திர நாயகர்களாக இருந்த எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகிய மூவரின் திரைப்படங்களிலும் நடித்து, முன்னணி நகைச்சுவை நடிகராக அறியப்பட்டார்.
* இவரது நகைச்சுவை நடிப்பிற்காகவே படங்கள் ஓடிய காலமும் உண்டு. இவர் திரையுலகின் உச்சத்தில் இருந்த காலகட்டங்களில், கதையின் நாயகனுக்கு இணையான ஊதியம் பெற்ற ஒரே நகைச்சுவை நடிகராகவும் இருந்திருக்கின்றார்.
* 1957ஆம் ஆண்டிலிருந்து “சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்” சார்பில் ஆண்டுதோறும் திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வந்தது. அதில் நகைச்சுவை நடிகருக்கான முதல் விருதைப் பெற்றவர் நடிகர் சந்திரபாபு. “மணமகன் தேவை” என்ற திரைப்படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
* 'யார்ட்லிங்' எனும் மேலைநாட்டு பாடும் முறையை ஹிந்தி திரையுலகில், நடிகரும், பின்னணிப் பாடகருமான கிஷோர் குமார் அவ்வப்போது தனது பாடல்களில் பயன்படுத்தி வந்தார். தமிழ் பாடல்களில் இந்த 'யார்ட்லிங்' முறையை கொண்டு வந்த பெருமை சந்திரபாபுவையே சேரும்.
* இவர் பாடிய பாடல்கள் அனைத்தும், இன்றும் அனைவரும் கேட்டு இன்புறும் காலத்தால் அழியா காவியப் பாடல்கள். குறிப்பாக “பிறக்கும் போதும் அழுகின்றாய் , இறக்கும் போதும் அழுகின்றாய்”, “ஒண்ணுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது” என்ற இந்த சோகப் பாடல்களுக்குக் கூட, ஒரு தனி சுகத்தை தந்திருக்கும் இவரது குரல். ஒரு நகைச்சுவை நடிகர் பாடிய சோகப் பாடல்கள் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது என்றால் அது நடிகர் சந்திரபாபுவின் பாடல்கள் மட்டுமே.
* நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை தமிழ் சினிமா உலகிற்கு கொண்டு வந்த பெருமையும் இவருக்குண்டு. தன்னைப் பார்த்து பிறர் அறிந்து கொள்ளும் வகையில் மேற்கத்திய பாணியில், புதிய நாகரீகத்தில் உடை அணிவது இவரது வழக்கமாக இருந்தது.
* இத்தனை திறமைகளும், பெருமைகளும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு மாபெரும் திரைக்கலைஞன், மது என்ற அரக்கனின் கோரப் பிடியில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 அன்று கலையுலகிலிருந்தும், இப்பூவுலகிலிருந்தும் விடை பெற்று விண்ணுலகை அடைந்தார்.
* வீழ்ந்த ஒரு மாபெரும் திரைக்கலைஞனின் வாழ்க்கையின் மறுபக்கம் எத்தகைய சோகங்களையும், வலிகளையும், ஏமாற்றங்களையும் சுமந்தவை என்பதற்கு, சரியான உதாரணமாக வாழ்ந்து மறைந்த, நடிகர் சந்திரபாபுவின் பிறந்த தினமான இன்று, அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து, அவரை போற்றிப் புகழ்வதில் நாம் பெருமை கொள்வோம்.